'வாலி 80' கொண்டாட்டம். காவியக் கவிஞராக விளங்கும் வாலியின் 80வது பிறந்தநாள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. தமிழ் திரையின் துருவ நட்சத்திரங்களான ரஜினி, கமல் இந்த விழாவில் பங்கேற்றனர். விழாவில் வாலி எழுதிய பாடல்களில் 1000 பாடல்களை தேர்வு செய்து அதை புத்தகமாக வெளியிட்டனர். இந்த 'வாலி 1000' புத்தகத்தை கமலஹாசன் வெளியிட அதை இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். இதில் கவிபேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டார் என்பது இன்னொரு சிறப்பு.
கமல் புகைப்பட நிருபர்களிடம் ஏதோ ஒரு கோபத்துடனே இருந்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. கமல் காரில் இருந்து இறங்கியவுடன் பளீர் என வெளிச்சம் அவர் முகத்தில் பட்டது. அது வீடியோ காமிராவின் ஸ்பாட் லைட். சட சடவென ஸ்டில் கேமராக்களின் ப்ளாஷ். வெளிச்சம் தன் மீது படுவதை விரும்பாத கமல் கையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டார். லைட்டை அணைக்க சொல்லி கோபத்துடன் கை அசைத்தார். ஆனால் பளீர் வெளிச்சம் படர்ந்தபடியே இருந்தது. 'லைட்டை ஆப் பண்ணுங்கப்பா...' என்று அங்கிருந்தவர்கள் கூச்சல் போட... லைட் அணையவில்லை.
லைட்டை நிறுத்தினால் தான் இந்த இடத்தை விட்டு நகர்வேன் என கமல் கோபத்துடனே தன் கையை அசைத்தபடி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக லைட் அணைக்கப்பட்டது. கமலும் விழா அரங்கிற்குள் சென்றார். 'பளிர்னு லைட் பட்டதினாலே கோபப் பட்டுட்டாரு போலப்பா! என்று புகைப்பட நிருபர்கள் பேசிக் கொண்டார்கள்.
விழா அரங்கில் 'வாலி 1000' புத்தகம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. கமல் எழுந்தார், மேடையில் இருக்கும் அனைவரும் எழுந்தார்கள். மீண்டும் புகைப்பட நிருபர்கள் க்ளோசப்பில் போட்டோ கிடைக்கும் என்று கமலை மேடைக்கு முன்பாக அழைத்தார்கள். 'ஏன் இங்கே நின்னா எடுக்கமுடியாதா?' என கேட்டார் கமல். கமலை வாலி முன்னுக்கு அழைத்தார். அதை மறுத்த கமல், 'இல்லைப் பரவாயில்லை...' என்று கையசைத்தப்படியே சொன்னார். புத்தகம் வெளியிடப்பட்டது. ஏன் நம்ம மேல இவ்வளவு கடுப்பா இருக்காரு என்று புகைப்படக் நிருபர்கள் பேசிக் கொள்ள... அருகில் அமர்ந்திருந்த சூர்யாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் கமல்.
வாலியைப் பற்றி மேடையில் இருந்தவர்கள் பாராட்டிப் பேசினார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாலி எழுதி அவர் பாடிய பாடல்களை மேடையில் பாடிக் கொண்டிருந்தார். பாடல்களுக்கு மெய்மறந்து கைத்தட்டிக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். திடீரென விண்ணைப் பிளக்கும் அளவிற்கு கைத்தட்டல் சத்தம், மேடையில் ரஜினி! ரசிகர்களுக்கு வணக்கம் வைக்கிறார். (எப்போ வருவாரு எப்படி வருவாரு என யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவாரு... உண்மைதான்). இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ரஜினியுடன் வைரமுத்துவும் வந்திருந்தார். இன்னும் ஆச்சர்யம்! வாலி பாராட்டு விழாவில் வைரமுத்துவா?
ரஜினி பேசும் போது வாலியைப் பாராட்டி பேசியதோடு அவர் மீது எனக்கு ஒரு கோபம் என்று குண்டைத் தூக்கிபோட்டார்! எல்லோரும் புருவம் நிமிர்த்த... என் மகள் திருமணத்திற்கு நான் நேரில் சென்று வாலி சாருக்கு பத்திரிகை வைத்தேன். ஆனால் அவர் திருமணத்திற்கு வரவில்லை. அதனால் இந்த விழாவுக்கு வரமாட்டேன் என்று நான் மறுத்துவிட்டேன். வைரமுத்து தான் என்னை அழைத்து வந்தார் என்றார் ரஜினி. மேலும் 'நாம நண்பர்கள் மாதிரிதானே பழகுறோம்... இல்லையா என்னால வரமுடியாது என்று என்னிடம் நேராக சொல்லியிருக்கலாமே. அது பற்றி அவர் மீது எனக்கு ரொம்பவும் கோபம். இன்று வரை அவரிடம் நான் பேசவே இல்லை' என்று உரிமையாக தன் கோபத்தை வெளிப்படுத்தினார் ரஜினி.
வாலி பேசும் போது, நேரில் வந்து பத்திரிகை வைத்தும் நான் திருமணத்திற்கு வரவில்லை என்று ரஜினி ஏன் மீது கோபப்படுகிறார். நான் அப்படி ஒன்றும் நாகரீகம் அற்றவன் அல்ல, அன்று தான் என் மனைவியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது என்று பதிலளித்தார். என்னைக் கோபக்காரன் என்று ரஜினி என்னிடம் ஒருமுறை சொன்னார் என்ற நிகழ்வை சொன்ன வாலி... கோபப்படாமல் இருக்க நான் என்ன மண்புழுவா? மரவட்டையா? மனுஷன்யா என்று ஜாலியாக ஒரு பஞ்ச் வைத்தார்.
ரஜினி தன் கோபத்தை வெளிப்படையாக மைக் முன்பு பேசிவிட்டார். கமல் ஒரு விளங்க முடியா கவிதை!
No comments:
Post a Comment