Thursday, December 16, 2010

பகலில் தூங்குவது நல்லது!


நீங்கள் பகலில் சற்று நேரம் குட்டித்தூக்கம் போடும் பழக்கம் உள்ளவரா? சங்கடத்தோடு `ஆமாம்’ என்று தலையசைக்காதீர்கள். நண்பகல் வேளையில் சிறிது நேரம் கண்ணயர்வது உடம்புக்கு நல்லது என்று ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் இருவர் கண்டறிந்து கூறியுள்ளனர்.
ஜெர்மனியின் மாக்ஸ்பிளாங்க் உளவியல் அமைப்பைச் சேர்ந்த ஜுர்கன் சுல்லே, ஸ்காட் காம்பெல் ஆகிய இருவரும் மதிய உறக்கம் பற்றிக் கூறுகையில், இது நல்லது என்பதுடன், திறமையாக வேலை செய்யவும் உதவுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அந்த விஞ்ஞானிகள் இதுபற்றி விரிவாக நடத்திய ஆய்வின் பலனாக அவர்களுக்கு ஐரோப்பிய தூக்க ஆராய்ச்சி சங்கத்தின் டபிள் ஆர் ஹெஸ் நினைவுப்பரிசு கிடைத்துள்ளது.

அந்த இரு ஆராய்ச்சியாளர்களும் பாதாள அறையில் பலரைத் தூங்கச் செய்து பல ஆண்டுகாலம் ஆய்வு நடத்தினர்.

பொதுவாக, ஓய்வுக் கட்டத்தில் மனித உடல் வெப்பநிலையானது சற்றுக் குறைகிறது. நடுப்பகல் வாக்கில் அந்த அளவுக்கு உடல் வெப்பநிலை குறைவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். வேறு விதமாகச் சொல்வது என்றால், மனித உடலின் இயல்பான அமைப்பானது பகல் உணவு வேளையில் சற்று நேரத்துக்குத் தானாக ஓய்வுக்குத் தயார் நிலையை அடைகிறது என்பது அவர்களின் கருத்து.

எனவே முடிந்தால் மதிய வேளையில் சிறிது `கோழித் தூக்கம்’ போட்டு வேலைத்திறனை அதிகரித்துக்கொள்வதுடன், மனஅழுத்தத்தையும் குறைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment